உங்கள் ஏ.டி.எம் கார்டில் இந்தக் குறியீடு இருக்கின்றதா..? எச்சரிக்கை!
ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட வேண்டி இருந்ததால், அப்பாவிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர் போன பிறகு, சில நிமிடங்கள் கழித்து, வங்கி கணக்கில் இருந்து 200 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அதனை பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு 200 ரூபாய் எடுக்கப்பட்ட மெசேஜ் வந்தது. அப்பா வீட்டுக்கு வந்த உடனே, “400 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டீங்களா?” என்று கேட்டேன். “இல்லையேப்பா 200 ரூபாய்க்கு தானே போட்டேன்” என்றார். அவரை அழைத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் சென்று விசாரித்த பொழுது தான் தெரிந்தது, tap and pay என்கிற முறையில் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்று. முதல் முறை சரியாக ஸ்கேன் ஆகவில்லை என்று சொல்லி, இன்னொரு முறை கார்டை ஸ்கேன் செய்திருக்கிறார்கள். அதனாலேயே இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த குளறுபடிக்கு பின்னால் இருக்கும் tap and pay ஏ.டி.எம் கார்டு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். முன்னர் எல்லாம் கார்டை, அவர்கள் வைத்திருக்கும் மெஷினில் உரசி எடுத்து, நம்முடைய இரகசிய பின் நம்பரை போட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். ஆனால் tap and pay ஏ.டி.எம் கார்டு அப்படி கிடையாது. இது வை-பை தொழில்நுட்பபத்தில் செயல்பட கூடியது. கார்டு உரச வேண்டிய மெஷின் மீது, நம்முடைய ஏ.டி.எம் கார்டை வைத்தாலே போதும், பணம் எடுக்கப்பட்டு விடும். இதற்காக பின் நம்பர் எல்லாம் போடத்தேவையில்லை. இதனை சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டு, பல மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல, ஏ.டி.எம் அட்டையில் wifi சின்னம் இருந்தால் இந்த வசதி உள்ளது என்பது உறுதி செய்து கொள்ளலாம். இவ்வகை அட்டைகளை பயன்படுத்தும் போது, உங்கள் கவனத்தை திசை திருப்பி, பின் நெம்பர் இல்லாமல் ஒருமுறை கட்டணத்தை வசூலித்துவிட்டு, அதே கட்டணத்தை மறுபடியும் கார்டு உரசுவதன் மூலமும் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு ஒரு தடவை மட்டும் பில்லை போட்டு, நம்மிடம் தந்துவிடுவதால் நமக்கு சந்தேகம் வருவதில்லை. முடிந்த வரையில் வங்கியில் இருந்து வரும் மெசேஜ்களை அடிக்கடி பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் tap and pay முறையில் பணம் செலுத்தியதற்கு, 24 மணி நேரம் கால அவகாசத்தை வங்கிகள் தமது வாடிக்கையாளருக்கு வழங்குகிறார்கள். இரு முறை கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால், கைபேசியில் வங்கியை தொடர்புகொண்டால் மட்டும் போதுமானது, பணம் நமது கணக்கில் செலுத்தப்படும். நிறுவனம் இதே தவறை பல முறை செய்தால், வங்கிகள் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரும். டெக்னாலஜி முன்னேற முன்னேற, இது போன்ற ஹைடெக் திருட்டும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். இதைப்பற்றி அறிந்து, கவனமாக இருப்பதே இவற்றை தடுக்க எளிதான வழி.